இன்றைய உலகுக் குறள் கூறும் அறிவுரைகள்

                                                இன்றைய உலகுக் குறள் கூறும் அறிவுரைகள்

முனைவர் இர. பிரபாகரன்

முன்னுரை

இவ்வுலகில் மனிதர்கள் நெடுங்காலமாகவே தங்களுடைய வாழ்க்கையில் பலவகையான துன்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; மற்ற உயிரினங்களும் பல இன்னல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய துன்பங்களுக்கு முடிவுகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐக்கிய நாடுகளின் அவையைச் சார்ந்த அறிஞர்கள் 2015 ஆம் ஆண்டு, நிலையான வளர்ச்சிக்கான பதினேழு இலக்குகளை முடிவு செய்தார்கள்ஆங்கிலத்தில், அவை ‘United Nations Organization’s Sustainable Development Goals’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த இலக்குகளை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அந்த இலக்குகளை அடைந்தால் உலகில் வறுமை, பிணி, வன்முறை மற்றும் சுற்றுச் சூழல் சீரழிவு ஆகியவற்றால் வரும் நான்கு பெரும் துன்பங்களையும் பெருமளவில் குறைத்துவிடலாம் என்பது . நா. அவை அறிஞர்களின் கருத்து. இந்த நான்கு பெரும் துன்பங்களும் வள்ளுவர் வாழ்ந்த காலத்திலும் இருந்தன. அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி வள்ளுவர் பல குறட்பாக்களில் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

வறுமை

ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்குமுன், கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் மக்கள் மிகுந்த வறுமையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. தமிழ் நாட்டில், சங்க காலத்தில் புலவர்களும் பாணர்களும் வறுமையில் வாடி, வள்ளல்களையும் மன்னர்களையும் நாடிச் சென்று பரிசு பெற்றதாக சங்க இலக்கியம் கூறுகிறது. எல்லாக் காலங்களிலும் வறுமையில் வாடிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும் கோடிக்கணக்கான மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

 

மன்னன் கொடையிலும் ஈகையிலும் சிறந்து விளங்கி, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இறைமாட்சி என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். ஒரு நாட்டில் உள்ள வறுமையை மன்னனால் மட்டுமே ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த வள்ளுவர், ”வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள் – 221)” என்று ஈகைக்கு இலக்கணம் வகுக்கிறார். மேலும், “தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் – 212).” என்று, கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைபோல், பொருள் இல்லாதவர்களுக்குப் பொருள் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் (குறள் -1062).” என்று இறைவனையே வள்ளுவர் சாடுகிறார். எவரும் இரந்து உயிர் வாழும் நிலை இல்லாமல் இருக்க வேண்டுமானால், மன்னனும், மக்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை வறியவர்களுக்கு உதவி செய்து அவர்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. வறுமையில் இருந்து, பசியென்று வந்து கேட்பவர்க்கு உணவு அளிப்பதால் மட்டும் வறுமையை ஒழிக்க முடியாது. வறுமையில் இருப்பவர்கள் வறுமையில் இருந்து நீங்கி வளமான வாழ்வு வாழ்வதற்கு அரசும்  செல்வம் உள்ளவர்களும் வழிவகுக்க வேண்டும் என்பதுதான் ஈகை மற்றும் ஒப்புரவு ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்து.

 

 

பிணி

றுமையைப்போல் பிணியும் இவ்வுலகை நெடுங்காலமாகவே துன்புறுத்திவருகிறது. மருந்து என்ற அதிகாரத்தில், ”முன்பு உண்ட உணவு செறித்த பிறகு, மாறுபாடு இல்லாத உணவை அளவோடு உண்டால் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நோய்கள் வாரா (குறட்பாக்கள் 942, 945).” என்று வள்ளுவர் கூறுகிறார்இவ்வாறு உண்பதனால் எல்லா நோய்களையும் தவிர்க்க முடியாது என்பதை அறிந்த வள்ளுவர், “உறுபசியும் ஓவாப் பிணியும் (குறள் – 734)” இல்லாமல் இருப்பதுதான் சிறந்த நாடு என்று மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார். மரபுவழி வரும் நோய்கள், புற்று நோய்கள், கொடுந்தொற்று நோய்கள் போன்ற கொடிய நோய்களைத் தவிர்ப்பதற்கும் அவற்றை குணப்படுத்துவதற்கும் ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்பேற்று ஓவாப் பிணிகளை அழிக்க வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

ன்முறை

இவ்வுலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை பலவகையான ன்முறைச் செயல்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த கேய்ன், பல் என்ற இரு மகன்களில் ஒருவன் மற்றொருவனைக் கொன்றதாக விவிலியத்தில் காண்கிறோம். போர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறைகளும் மற்றும் பல வன்முறைகளும் நெடுங்காலமாகவே உலகில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ”இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (குறள்316)”, என்று இன்னாசெய்யாமைக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், ”எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய்யாமை தலை (குறள் – 317)” என்று அறிவுரை கூறுகிறார். இன்னா செய்யாமை மற்றும் கொல்லாமை ஆகிய அதிகாரங்களில் வன்முறைகளைக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

சுற்றுச் சூழல் சீரழிவு

தங்களுடைய உணவுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை வேட்டையாடிச் சேகரித்த மனிதர்கள், ஏறத்தாழ பதினோராயிரம் ஆண்டுகளுக்குமுன், வேளாண்மை செய்யத் தொடங்கியவுடன் காடு திருத்திக் கழனி ஆக்கினார்கள். அதிலிருந்து சுற்றுச் சூழல் சீரழிவு தொடங்கியதாக யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய Sapiens – A Brief History of Humankind என்ற நூலில் குறிப்பிடுகிறார். மனிதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் விலங்குகளை அழித்தார்கள்; காடுகளை அழித்தார்கள்; சுற்றுச் சூழல் சீரழிவு நடைபெறத் தொடங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழிற்புரட்சிக்குப் பிறகு நிலக்கரி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீருந்துகளும், இருபதாம் நூற்றாண்டில் விமானங்களும் வரத் தொடங்கிய பிறகு, கல்லெண்ணெய் (Petroleum) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.  நிலக்கரி, கல்லெண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருள்களை (புதைபடிவ எரிபொருள் - Fossil Fuel) எரிக்கும்போது, அவை நாம் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், கரியமில வாயுவை அதிக அளவில் காற்றில் வெளிப்படுத்துகின்றன. அதனால் வளிமண்டலமும் புவியும் வெப்பமடையும் வாய்ப்பு ஏற்படுகிறது. புவி வெப்பமடைவதால், வானிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது தொடர்ந்து நடைபெற்றால் கடல் மட்டம் உயரும்; கடலோரங்களில் உள்ள ஊர்கள் நீரில் மூழ்கும். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்கள் நிலத்தையும் நீரையும் பாழக்குகின்றன. நெகிழியாலான (நெகிழி - Plastics) பொருட்கள் நிலத்தையும் கடல் நீரையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் அங்கு வாழும் விலங்குகளுக்குத் தீமை விளைவிக்கின்றன.  இவ்வாறு, ஆகாயத்தையும், நிலத்தையும், நீரையும் காற்றையும் தொடர்ந்து மாசுபடுத்தினால் அது நம்முடைய வாழ்வுக்கும் மற்ற உயிரினங்களின் வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

 

வள்ளுவர் காலத்தில், மனிதர்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக அளவில் கேடு விளைவிக்கவில்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனிதர்கள் சுற்றுச் சூழலுக்குச் செய்யும் தீமைகள் அதிகரித்துவிட்டன. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் வள்ளுவர் சில அறிவுரைகளைக் கூறுகிறார்.

 

இக்காலத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் இவ்வுலகம் சொந்தமானதன்று. நமது அடுத்த தலைமுறையினர்களுக்கும், இக்காலத்தில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் அவைகளின் சந்ததிகளுக்கும் இவ்வுலகம் சொந்தமானது. ஆகவே, உலகைப் பாழாக்கி, அதை வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் அழிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. சுற்றுச் சூழலுக்கு கேடுகள் வருவதற்குக் காரணம் விஞ்ஞானம் மற்றும் தொழில் நூட்பம் ஆகிய துறைகளின் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் செயற்கைப் பொருள்கள்தான். செயற்கைப் பொருள்களால் பல நன்மைகள் இருப்பதால், அவற்றைத் தவிர்க்க முடியாது. செயற்கையாக எதைச் செய்தாலும் அது இயற்கைக்கு முரணானதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அதை  இயற்கையோடு  இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தையும், “செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (குறள்637).” என்ற குறளில் வள்ளுவர் எச்சரிக்கிறார்.

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு  இல்லை அதிர வருவதோர் நோய் (குறள் – 429)” என்ற வள்ளுவரின் அறிவுரைக்கேற்ப, விஞ்ஞானிகள்  கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி, சுற்றுச் சூழலின் சீரழிவைத் தடுத்து,  நம்மையும் நமது சந்ததியினரையும் மற்ற உயிரினங்களையும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பேரழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வது நமது தலையாய கடமை.

முடிவுரை

வறுமை, பிணி, வன்முறை, சுற்றுச் சூழல் சீரழிவால் வரும் தீமைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள் எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்றவை. மனித சமுதாயம் இதுவரை அவற்றைப் பின்பற்றத் தவறிவிட்டது. இனி வருங்காலத்திலாவது வள்ளுவரின் அறிவுரைகளைப் பின்பற்றி நாம் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்