பொருண்மொழிக் காஞ்சி
பொருண்மொழிக் காஞ்சி முனைவர் இர . பிரபாகரன் தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘ பொருள் ’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம் , புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கிய மரபு. களவொழுக்கத்திலும் , இல்லற வாழ்க்கையிலும் தலைவனும் தலைவியும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால் , அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் ஏழு அகத்திணைகளில் அடங்கும் . காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர் , வீரம் , வெற்றி , புகழ் , கொடை , நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைகளில் அடங்கும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் பதினொரு புறத்திணைகளைச் சார்ந்தவையாக உள்ளன . எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறும் திணை பொதுவியல் எனப்படும் . திணை என்னும் பெரும்பிரிவின் உட்பிரிவுகள் துறைகள் எனப்படும். பொதுவியல் என்னும் திணையின் உட்பிரிவுகளுள் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையும்...