அவ்வையாரும் அதியமானும்
அவ்வையாரும் அதியமானும் முனைவர் இர. பிரபாகரன் அவ்வையார் என்ற பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கும், நெற்றியில் திருநீறு அணிந்து, வெள்ளைப் புடைவையை உடுத்தி, கையில் தடியோடு, நடந்து வரும் வயதான, பாட்டி போன்ற, ஒருபெண்மணியின் உருவம்தான் நினைவிற்கு வரும். அடுத்து, அவர் எழுதிய ஆத்தி சூடி என்ற நூலிலிருந்து, நாம் பள்ளியில் படித்த, “ அறம் செய விரும்பு”, ”ஆறுவது சினம்” போன்ற சில வரிகள் நினைவிற்கு வரும். ஆனால், அவ்வையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் பல காலகட்டங்களில் தமிழ் நாட்டில் வாழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். கடந்த 2300 ஆண்டுகளில் அவ்வையார் என்ற பெயரில் நான்கு அல்லது ஐந்து பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று பேராசிரியர் மு. வரதராசனார் “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் கூறுகிறார். சங்க காலத்தில் (கி.மு. 300 - கி.பி. 300) வாழ்ந்த அவ்வையார் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். அடுத்து, கி. பி. எட்டாம் நூற்றண்டில் நாயன்மார்கள் காலத்தில் சிவபக்தியோடு ஒரு அவ்வையார் வாழ்ந்தத...