காந்தர்வமணமும் களவொழுக்கமும்
காந்தர்வமணமும் களவொழுக்கமும்
(குறிஞ்சிப்பாட்டு)
முனைவர் இர. பிரபாகரன்
இந்துமதத்தின்
புராணங்களிலும் இதிகாசங்களிலும் எட்டு வகையான திருமணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை வடமொழியில் பிரமம், பிரசாபத்தியம், ஆரிஷம், தெய்வம், காந்தர்வம், அசுரம், ராட்சசம், பைசாசம் என்று
அழைக்கப்படுகின்றன.
பிரமம்: ஒரு
பெண்ணுக்கு அணிகலன்கள் அணிவித்து,
வேதம் கற்று பிரமசாரியாய் இருப்பவன் ஒருவனுக்கு அவளைத் தானமாகக் கொடுப்பது.
பிரசாபத்தியம்: ஆண் பெண் ஆகிய இருவரது
பெற்றோரும் உடன்பட்டு, அந்த ஆணுக்கு அந்தப்பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது.
ஆரிஷம்: ஒன்றோ இரண்டோ
பசுவும், காளையும்
தானமாகப் பெற்றுக்கொண்டுபெண்ணைக் கொடுப்பது.
தெய்வம்: வேள்வி செய்வோர்
பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன் மணம்முடித்துத் தருவது.
காந்தர்வம்: கொடுப்போரும், கேட்போரும்
இன்றி ஒரு ஆணும் பெண்ணும் தனி இடத்தில்எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.
அசுரம்: பெண்ணின்
தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கு
அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை ஏற்று
மணந்து கொள்வது.
ராட்சசம்: பெண்ணை
வலுக்கட்டாயமாகக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்து கொள்வது.
பைசாசம்: உறங்கும் பெண், (கள் உண்டு)
களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த
பெண் முதலானவர்களுடன் கூடிக்களிப்பது.
சங்க காலத்தில், தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்கள் வழக்கில் இல்லை. சங்க
காலத்தில் மூன்றுவகையான திருமணங்கள் மட்டுமே வழக்கிலிருந்தன. ஒன்று, ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்துத் தங்கள்
பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதலித்த பிறகு, பெண்ணின் பெற்றோர்
அப்பெண்ணை அந்த ஆணுக்குத் திருமணம் செய்விப்பது, பெண்ணின் பெற்றோர்
சம்மதிக்காவிட்டால், ஆணும் பெண்ணும் ஆணுடைய ஊருக்குச் சென்று திருமணம் செய்துகொள்வது
மற்றொருவகை. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் நடைபெற்றதாகப்
புறநானூற்றிலிருந்து தெரியவருகிறது.
ஒரு ஆணும் பெண்ணும்
தற்செயலாகச் சந்தித்துத் தங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதலிப்பது களவொழுக்கம்
என்று தொல்காப்பியம் கூறுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட எட்டு வகையான திருமணங்களுடன்
ஒப்பிட்டுப்பார்த்தால் களவொழுக்கம் காந்தர்வமணத்தைப் போன்றது என்ற கருத்தும் தொல்காப்பியத்தில்
காணப்படுகிறது. காந்தர்வமணத்தில் ஊரறியத் திருமணம் செய்துகொள்வது
கிடையாது. இக்காலத்தில், திருமணம் செய்துகொள்ளாமல், காதலர்கள் கூடி வாழ்வதைப்போல் (Living together) வாழ்க்கை
நடத்துவதுதான் காந்தர்வமணம். ஆனால், தமிழர்களின்
களவொழுக்கம் பெற்றோர்களின் சம்மதத்தோடோ அல்லது சம்மதம் இல்லாமலோ முறையாக ஊரறியத் திருமணத்தில்
முடிவுபெறுவதுதான் வழக்கம். இதுதான் காந்தர்வமணத்திற்கும் களவொழுக்கத்திற்கும் இடையே உள்ள வேற்றுமை.
ஆரிய மன்னன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக
கபிலர் என்ற பெரும்புலவர் குறிஞ்சிப்பாட்டு என்ற ஒரு நீண்ட பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.
ஓரு பாடலை எழுதுவதால் மட்டுமே ஒருவருக்குத் தமிழ் கற்பிக்க முடியாது.
கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டை ஆழ்ந்து படித்துப்பார்த்தால்,
அப்பாட்டு, களவொழுக்கத்திற்கும் காந்தர்வமணத்திற்கும்
உள்ள வேறுபாட்டை ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்டதாகத்
தோன்றுகிறது.
குறிஞ்சிப்பாட்டின்
தலைவியும் அவள் தோழியும் தினைப்புனத்தைக் காவல் காப்பதற்காகச் சென்றார்கள். தினைப்புனத்திற்குச் சென்று, பலவகையான கருவிகளால் ஒலியெழுப்பி
தினைப்புனத்திற்கு வந்த பறவைகளை விரட்டினார்கள். பின்னர்,
நண்பகல் நேரத்தில், வெயிலின் வெப்பம் அதிகமானதால்,
அவர்கள் அருவியிலும் குளத்திலும் நீராடி, ஆடிப்பாடி
மகிழ்ந்தார்கள். அந்தக் குளத்தருகே உள்ள தொண்ணூற்று ஒன்பதுக்கும்
மேலான பலவகை மலர்களைப் பறித்துத் தலையில் சூடிக்கொண்டார்கள்[1];
மாலையாகவும் அணிந்துகொண்டார்கள். அப்பொழுது,
அங்கு அழகிய ஆண்மகன்(தலைவன்) ஒருவன் வேட்டையாடுவதற்காக அந்த வழியாக வந்தான். அவனோடு
வந்த வேட்டை நாய்கள், தலைவியையும் தோழியையும் சூழ்ந்துகொண்டு
மிகுந்த ஒலியுடன் குரைத்து, அவர்களை அச்சுறுத்தின. தலைவியும் தோழியும் அச்சத்தோடு நடுங்கினர். அப்பொழுது,
அந்த ஆடவன், மரக்கிளை ஒன்றை முறித்து அந்த நாய்கள்
மீது எறிந்து அவை குரைப்பதை அடக்கினான். அதே சமயம், அங்கே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று பிளிறிக்கொண்டு ஓடிவந்தது, அதைக் கண்டு அஞ்சிய தலைவியும் தோழியும் அந்த ஆண்மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள்.
அவன் ஒரு அம்பெய்தி, அந்த யானையை விரட்டினான்.
அச்சமும் நாணமும் கொண்ட தலைவி தலைவனை விட்டுப் பிரிய முயன்றாள்.
ஆனால், அவன் அவளைப் பிரியவிடாமல், அவள் மார்பு தன்மார்போடு சேருமாறு இறுக்கி அணைத்துக்கொண்டான்.
தோழி அங்கிருந்து
விலகிச் சென்றாள். தலைவனும் தலைவியும் பகல்நேரம் முழுவதையும் அங்கிருந்த அழகிய சோலை ஒன்றில் இன்பமாகக்
கழித்தார்கள். மாலைநேரம் வந்தது. தலைவன்
தலைவியோடு கூடி இல்லறம் நடத்த விரும்புவதாகவும் அவளை விரைவில் ஊரறியத் திருமணம் செய்து
கொள்வதாகவும் சூளுரை உரைத்து அங்கிருந்து பிரிந்து சென்றான். அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவன் நாள்தோறும் இரவு
நேரங்களில் தலைவியைச் சந்திக்க வருகிறான். பல நாட்களில் அவளைச்
சந்திக்க முடியாமலேயே திரும்பிப் போகிறான்.
இவ்வாறு, ஒளிவு மறைவாகத் தன்னைச் சந்திப்பதற்குத் தலைவன் வரும்பொழுது அவன் வரும் வழியில்
உள்ள கொடிய விலங்குகள், வழிப்பறிக் கொள்ளையர்கள், இன்னல்கள் மிகுந்த பாதைகள் ஆகியவற்றால் அவன் சந்திக்க நேரிடும் துன்பங்களை
நினைத்துத் தலைவி வருந்துகிறாள். களவொழுக்கம் இன்னும் திருமணத்தில்
முடிவு பெறவில்லையே என்ற ஏக்கத்தோடு அவள் மனம் வருந்தி, உடல்
மெலிந்து காணப்படுகிறாள். தலைவனைப் பற்றிய நினைவு வரும்பொழுதெல்லாம்,
தன்னை அறியாமலேயே தலைவி அழுகிறாள்.
தலைவியின் நிலையைக்
கண்ட தோழியின் தாய் (செவிலித்தாய்) வருந்துகிறாள். தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ல காதலை தோழி தன் தாயிடம் வெளிப்படுத்துகிறாள்.
இவ்வாறு தோழி, தலைவியின் களவொழுக்கத்தை இல்லற வாழ்க்கையாக
மாற்றுவதற்காகத் தன் தாயிடம் கூறுவது அறத்தொடு நிற்றல் என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறது.
குறிஞ்சிப்பாட்டில்
தோழி அறத்தொடு நிற்கிறாள். ஆனால், தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம்
நடைபெற்றறதா இல்லையா என்பதைக் கபிலர் நமது கற்பனைக்கு விட்டுவிடுகிறார். இலக்கிய நயத்தோடும், சுவையான கற்பனையோடும், குறிஞ்சிநிலத்தின் இயற்கை வளத்தையும், தலைவன் தலைவி ஆகியோரின் களவொழுக்கத்தையும்,
படிப்போர் உள்ளத்தைக் கவரும்
வகையில் - ஒரு காணொளியில் காணும் நாடகம்போல் - குறிஞ்சிப்பாட்டைக் கபிலர் இயற்றியுள்ளார்.
[1] குறிஞ்சிப்பாட்டில்
குறிப்பிடப்பட்டிருக்கும் 99 வகை மலர்களையும்
, https://www.youtube.com/watch?v=Ad1q0UGlbkI
என்ற இணையதளத்தில்
காணலாம்.
Comments
Post a Comment