வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி
வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி முனைவர் இர. பிரபாகரன் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்து, வையத்து வாழ்வாங்கு வாழ வழி காட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள். வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாட்டையும் ஆராய்ந்து அவற்றிற்குகந்த அறிவுரைகளைத் திருவள்ளுவர் திருக்குறளில் வழங்குகிறார். இல்லறம், துறவறம் ஆகிய கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று அறத்துப்பாலில் கூறப்பட்டிருக்கிறது. அது போல், அரசர்களும் அமைச்சர்களும் எத்தகைய குணநலன்கள் உடையவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் எப்படிப் பணிபுரிய வேண்டும் என்ற கருத்துகளை விளக்கமாகவும் தெளிவாகவும் வள்ளுவர் கூறியிருப்பதை பொருட்பாலில் அரசியல், அமைச்சியல் போன்ற பகுதிகளில் காணலாம். குறிப்பாக, “இறைமாட்சி” என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணநலன்களைக் குறிப்பிடுகிறார். தமிழகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் சங்க காலத்தில் (கி.மு. 500 - கி.பி. 200) வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு அக்காலத்தில் இயற்றப்பட்ட ...