முல்லைப்பாட்டு


முல்லைப்பாட்டு
பாட்டும் புலவரும்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்  பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன.  பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் முல்லைப்பாட்டும் ஒன்று. அது  103 அடிகளைக்கொண்ட சிறிய பாடல்.  இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன். இவருடைய பெயருக்கு முன் சிறப்புப் பொருளைத்தரும்என்னும் எழுத்தையும், பெயருக்குப்பின், உயர்வைக் குறிக்கும்ஆர் விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார். நக்கீரனார், நக்கண்ணையார், நத்தத்தனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் என்னும் சிறப்பு எழுத்து  இடம்பெற்றிருப்பதுபோல்  இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது. இவர் இயற்றியதாக முல்லைப்பாட்டு மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. 

இவர் தந்தையார் பொன்வாணிகனார் என்பதும் அவர் சோழநாட்டில் வாழ்ந்தவர் என்பதும் இவர் பெயரிலிருந்து தெரிகிறது.  ஆகவே, இவரும் சோழநாட்டைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முல்லைப்பாட்டு கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் கருத்து[1].
முல்லைத்திணை
காதல் வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் என்றும், காதலைத் தவிர மற்ற கருத்துக்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணைப் பாடல்களை, கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் மருதம் மற்றும்  பெருந்திணை என்று ஏழுதிணைகளாகத் (பிரிவுகளாகத்) தொல்காப்பியம் பிரிக்கிறது. கைக்கிளைத்திணை  என்பது ஒருதலைக் காதலையும், குறிஞ்சித்திணை என்பது காதலர்கள் சந்திப்பதைப் பற்றியும்,  பாலைத்திணை  என்பது காதலர்களிடையே நிகழும் பிரிவைப் பற்றியும், முல்லைத்திணை என்பது காதலனைப் (அல்லது கணவனைப்) பிரிந்திருக்கும்பொழுது காதலி (அல்லது மனைவி), பிரிவினால் ஏற்படுகின்ற துயரத்தைப் பொறுத்துக்கொண்டு இருப்பதையும், நெய்தல் திணை என்பது பிரிவின் துயரத்தின் மிகுதியால் காதலி (அல்லது மனைவி) இரங்குவதையும், மருதத்திணை என்பது பிரிந்து சென்ற கணவன் வீடு திரும்பியதும் அவனோடு மனைவி விளையாட்டுக்காகக் கோபித்துக் கொள்வதையும், பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கும் ஏழு திணைகளாகும். அகத்திணையைப் பற்றிய விரிவான விளக்கங்களைதொல்காப்பியமும் முல்லைப்பாட்டும்என்ற பகுதியில் (என்னுடைய வலைப்பதிவில்) காணலாம்.

மன்னன் ஒருவன் போருக்காகத் தன் மனைவியைப் பிரிந்து சென்றபொழுது அவனுடைய பிரிவினால் வரும் துயரத்தை அவன் மனைவி பொறுத்துக்கொண்டு, அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். இக்கருத்தை மையமாகக் கொண்டு, புலவர் நப்பூதனார் முல்லைப்பாட்டை இயற்றியுள்ளார். மனைவி, கணவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருப்பதைப் பற்றிய பாடலாகையால், முல்லைப் பாட்டு முல்லைத்திணையைச் சார்ந்த பாடலாகும். 
முல்லைப்பாட்டு பொருட் சுருக்கம்
ஓரு மன்னன் கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) தொடங்குவதற்கு முன்னரே திரும்பிவருவதாகக் கூறிப் போருக்குச் சென்றிருக்கிறான். அவனுடைய படைவீரர்கள், போர்க்களத்தருகே கடல் போன்ற பெரிய  பாசறை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந்தப் பாசறையில் மன்னனுக்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி இருப்பிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாசறையைச் சுற்றிலும் முள்ளாலான வேலியும், பல்வேறு அரண்களும் உள்ளன.

மன்னனின் மனைவி  (தலைவி) தன் கணவனைப் பிரிந்திருப்பதால் வருத்தத்துடன் இருக்கிறாள். கார்காலம் வந்ததற்கு அறிகுறியாகப் பெரிய மழை பெய்யத் தொடங்கியது. தலைவியின் துயரத்தைக் கண்ட அவளுடைய பணிப்பெண்களும் தோழியரும் ஊரருகில் உள்ள திருமால் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, தலைவன் போரில் வெற்றிபெற்றுத் திரும்பிவருவது குறித்து ஏதாவது நல்ல செய்தி கிடைக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அப்பொழுது, இடையர்குலப் பெண் ஒருத்தி, தாய்ப்பசுவைக் காணாமல் வருந்தும் இளங்கன்றை நோக்கி, “ உன் தாய்ப்பசு விரைவில் வரும்என்று கூறுகிறாள். அதைக்கேட்ட பணிப்பெண்களும் தோழிகளும் தாம் விரும்பிய நற்செய்தி கிடைத்ததாகக் கருதி, பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அரண்மனைக்குச் சென்று, தாம் கேட்ட  நற்செய்தியைத் தலைவியிடம் கூறி, தலைவன் விரைவில் வருவான் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால், தலைவியின் துயரம் தீரவில்லை. அவள் கண்களிலிருந்து முத்துமுத்தாக கண்ணீர்த்துளிகள் வருகின்றன. தலைவனைப் பிரிந்து வாழும் தன்னுடைய நிலையை நினைத்து, அவள் தொடர்ந்து வருத்தத்துடன் இருக்கிறாள்.

அதே நேரத்தில், பாசறையில், அன்றைய போரில், புண்பட்ட யானைகளையும், வீரத்தோடு போர்புரிந்து இறந்த வீரர்களயும், புண்பட்டு வருந்தும் குதிரைகளையும் நினைத்து, நெடுநேரம் உறக்கமின்றி மன்னன் படுக்கையில் படுத்திருக்கிறான்.

மறுநாள், போரில் மன்னன் வெற்றி பெற்றான். அன்றிரவு மகிழ்ச்சியுடன் உறங்குகிறான். அடுத்த நாள் காலை, வெற்றியின் அறிகுறியாக முரசு முழங்குகிறது. வீரர்கள் ஊதுகொம்பையும் சங்கையும் ஊதி ஆரவாரிக்கின்றனர். இந்த வெற்றி முழக்கத்தைக் கேட்ட மன்னன், தன் படையோடு,  தேரில் ஊர் திரும்புகிறான்.

 மன்னனைக் காணாத தலைவி, தன் அணிகலன்கள் நெகிழ்ந்து, அறிவு மயங்கி, அம்பு தைத்த மயில்போல் நடுங்கிக்கொண்டு படுத்திருக்கிறாள்.  மன்னனின் தேரில் பூட்டிய குதிரைகளின் குளம்பொலி கேட்டு அவள் பெருமகிழ்ச்சி அடைகிறாள்.

முல்லைப்பாட்டின் சிறப்பு
முல்லைத்திணைப் பாடலுக்குத் தொகாப்பியம் வகுக்கும் இலக்கணத்தை முழுமையாகக் கொண்டு முல்லைப்பாட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு காட்சிகளைக் கொண்ட ஒரு ஓரங்க நாடகம்போல் முல்லைப்பாட்டு அமைந்திருக்கிறது. முதற்காட்சியில், கணவனைப் பிரிந்திருக்கும் மனைவையின் மனநிலையையும், இரண்டாவது காட்சியில் பாசறை அமைப்பும் அதிலுள்ள மன்னின்  மனநிலையையும், மூன்றாவது காட்சியில் மீண்டும் மனைவி தன் கணவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முயற்சி செய்யும்பொழுது அவளுக்கு ஏற்படும் துன்பங்களையும், கடைசிக் காட்சியில் கணவன் போரில் வெற்றிபெற்று முல்லை நிலக்காட்டு வழியில் தன் தேரில் விரைந்து வருவதையும் புலவர் நப்பூதனார் மிக அழகாக, கவிதை நயத்தோடும்  முல்லைநிலத்தின் இயற்கைக் காட்சிகளோடும் கலந்து இப்பாடலை இயற்றியிருப்பது அவருடைய புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

கவிதை நயம் மட்டுமல்லாமல், முல்லைப்பாட்டிலிருந்து சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலைப் பற்றிய பல கருத்துகளைக்  காணலாம். மற்றும், முல்லைப்பாட்டில் உள்ள வருணனைகள் படிப்பவர்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

முல்லைப்பாட்டு அகத்திணைப்பாடலாக இருந்தாலும், அதில் முல்லைத்திணைக்கு இணையான வஞ்சித்திணையாகிய புறத்திணைக் கருத்துகளையும் கலந்து புலவர் நப்பூதனார் இயற்றியிருப்பது மிகச் சிறப்பகவும் பாராட்டத் தக்கதாகவும் உள்ளது.

 முல்லைப்பாட்டு உரை நூல்கள்
 கி.பி. மூன்றாம் நூற்றண்டில் முல்லைப்பாட்டு இயற்றப்பட்டிருந்தாலும், அது, பத்துபாட்டின் ஒருபகுதியாக, முதன்முதலாக நூலாக 1889 – ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களால், “பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும்என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டது. பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத்தில், இளங்கலை வகுப்புக்குரிய பாடங்களில் முல்லைப்பாட்டும் சேர்க்கப்பட்டிருந்ததால், .வே. சாமிநாத ஐயர் அவர்களும் மறைமலை அடிகளாரும் மாணவர்களுக்காக எளிய உரையை 1903 – ஆம் ஆண்டு பதிப்பித்தனர். அதற்குப் பிறகு, 1955 – ஆம் ஆண்டு, பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்கள் முல்லைப்பாட்டுக்கு ஒரு சிறந்த உரையை பதிப்பித்தார். அதற்குப் பிறகு, முல்லைப்பாட்டுக்கும் பத்துப்பாட்டுக்கும் பல உரைகள் பல பதிப்பகத்தாரால் வெளயிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள திருமதி. வைதேகி  ஹெர்பெர்ட் அவர்கள் முல்லைப்பாட்டையும் மற்ற சங்க இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.



[1] சங்க இலக்கிய வரலாறு, மா. ரா. களஞ்சியம் (பக்கம் 239), காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை

Comments

Popular posts from this blog

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்