தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்!


தமிழால் இணைவோம்; செயலால் வெல்வோம்!

முனைவர் இர. பிரபாகரன்

உலகில் சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் இருப்பதாகவும் அதில் 6.5 கோடித் தமிழர்கள் இந்தியாவிலும் மற்ற 1.5 கோடித் தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழர்கள் பல நாடுகளிலிருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால் நாம் எல்லா நாடுகளிலேயும் சிறுபான்மையினராகவே பலகாலமாக வாழ்ந்து வருகிறோம். ஒரு இனம் சிறுபான்மையானதாக இருந்தால், பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங்கி வாழவேண்டிய சூழ்நிலையில்தான் அவ்வினம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகில், இனத்தின் அடிப்படையில் நெடுங்காலமாகப் போர்கள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு  வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. கடந்த நூற்றாண்டில், இனத்தின் பெயரால் எவ்வளவோ அட்டூழியங்களும் படுகொலைகளும் நடைபெற்றன. ஹிட்லரின் தலைமையில் செர்மானியர்கள் பல்லாயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தார்கள். ஐரோப்பாவில் பால்கன் வட்டாரத்தில் செர்பியர்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆப்பிரிக்காவில் ரொவாண்டாவில் நடந்த இனப்போராட்டத்தில் எண்ணற்றவர் உயிரிழந்தனர். மற்றும், ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். பர்மாவிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையில், சிங்களவருக்குத் தமிழர்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சியால், இலங்கை அரசின் இராணுவம் தமிழர்களைத் தாக்கியதும், பல்லாயிரக் கணக்கான தமிழர்களைச் சுட்டுக் கொன்றதும், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும், முந்நூறாயிரம் தமிழர்கள் முள்வேலிக்குப் பின்னால் விலங்குகளைப் போல் அடைக்கப் பட்டதும் அண்மைக் கால நிகழ்வு.  மலேசியாவில் இருக்கும் தமிழர்களின் நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுவரை உலக வரலாற்றில் நடைபெற்ற இனப் போராட்டங்களைச் சிந்தித்துப் பார்த்தால் இது போன்ற இனப் போராட்டங்கள் எதிர் காலத்திலும்  தொடர்ந்து நடைபெறும் என்று எண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே, ”சிறுபான்மை இனமாகிய தமிழினம்  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமா? பாதுகாத்துக்கொள்ள முடியுமானால், எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன், ’நாம் யார்?’ என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்பதால் நாம் நம்மைத் திராவிடர்கள் என்று கூறிக்கொண்டு தெலுங்கர்களோடும், கன்னடத்தாரோடும், மலையாளிகளோடும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நினைப்பதும், வாழவேண்டும் என்று விரும்புவதும் வெறும் கற்பனையே தவிர, நடைமுறைக்கு ஏற்றதன்று. நமக்குச் சேர வேண்டிய ஆற்று நீரைக்கூட நம்மோடு பகிர்ந்து கொள்ள  விரும்பாதவர்கள் நம்மோடு சேர்ந்து வாழப்போவதில்லை. நம் இனம் என்பது தமிழினம். நாம் தமிழர்கள். உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டுக் குடியுரிமை பெற்றாலும், நாம் தமிழர் என்பதை மறவாமல் இருக்க வேண்டும். நம்முடைய இளைஞர்களிடத்தும் இந்தக் கருத்தை நாம் வலியுறுத்த வேண்டும். யூதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாங்கள் யூதர்கள் என்பதை மறவாமல் மதத்தால் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். அது போலவே, நாம் தமிழர் எம்பதை மறவாது, தமிழால் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.

ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தாலும், தமிழர்கள் எப்பொழுதும் தம்மை ஓர் இனமாகக் கருதி  ஒற்றுமையாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்த சங்க காலத்திலும் அவர்களுக்குள் போர் புரிவதும் ஒருவரை ஒருவர் அழிப்பதும் மரபாக இருந்ததாகவே சங்க இலக்கியம் காட்டுகிறது.  ஆட்சியிலிருந்தவர்களின் சுயநலம், பொறாமை, போர்வெறி, போன்ற காரணங்களால் தமிழ் நாட்டில் எப்பொழுதும் போர் முரசு ஒலித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான், களப்பிரர்கள்  தமிழ் மன்னர்களை வென்று தமிழ் நாட்டை (கி.பி. 300 முதல் கி, பி. 600 வரை) ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. பின்னர், தமிழர் அல்லாத பல்லவர்கள் ஆட்சி செய்தார்கள். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மராட்டியர்களும், தெலுங்கர்களும், இஸ்லாமியரும் அதன் பின்னர் ஆங்கிலேயர்களும் தமிழகத்தை ஆட்சி புரிந்தார்கள். ஆகவே, நமது வரலாற்றைப் பார்த்தால், நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்  நாம் பல நூற்றாண்டுகளாக மற்ற இனத்தவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு  வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

கடந்த நூற்றாண்டுகளில் மற்ற இனத்தவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் தமிழர்கள் அடங்கி வாழ்ந்தார்கள். இப்பொழுது, தமிழர்களாகிய நாம் சாதி, மதம், அரசியல் கட்சிகள் ஆகிய சக்திகளால்  பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, பிறருடைய கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் நம்மை அடிமைப்படுத்திக்கொண்டு,  ஒற்றுமையின்றி, “பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்[1]” என்ற வள்ளுவரின் சமத்துவக் கொள்கையை மறந்து, தன்னம்பிக்கை குறைந்து, தன்னலம் மிகுந்து வாழ்கிறோம்.

மக்களாட்சி என்ற உயர்ந்த தத்துவத்தை நடைமுறையாக்கும் பொழுது அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக, மக்களாட்சி நடைபெறும் நாடுகளில், அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையில் வேறுபட்டாலும், நாட்டு மக்களின் நல்வாழ்வே தங்கள் நோக்கமாகக் கொள்வதுதான் வளர்ச்சியடைந்த மக்களாட்சியின் மரபு. ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சாதிகள் அடிப்படையிலும், சுயநலத்தின் அடிப்படையிலும் இயங்கி வருகின்றன.  “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையாக[2]” நாட்டின் நலத்தில் அக்கறை காட்டாமல், தங்கள் சுயநலத்தில் அக்கறை காட்டித் தமிழர்களின் ஒற்றுமையின்மையைத் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் வளர்க்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களிடத்திலேயே ஒற்றுமை இல்லாவிட்டால், உலகளாவிய தமிழர்களின் நல்வாழ்வில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் எப்படி அக்கறை காட்டப் போகிறார்கள்?

தமிழினம் சாதி, மதம், அரசியல் கட்சிகள் போன்ற சக்திகளால் என்றுமே ஒன்றுபடப் போவதில்லை.  நம்மை ஒன்றுபடுத்தக் கூடியது தமிழ் மொழி ஒன்றுதான். நாம் தமிழர்கள் என்பதில் பெருமையுடன் நாம் தமிழால் ஒன்றுபட வேண்டும். நமது மொழியும் இனமும் உயிரும் உடலும் போல் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். தமிழ் மொழியை மறந்தால் நாம் தமிழர்கள் அல்ல. நமது இனம் அழிந்தால் நமது மொழி வாழப்போவதில்லை. அது போலவே, நமது மொழி அழிந்தால், நமது இனம் தமிழ் இனமாக இல்லாமல்  மற்ற இனங்களோடு  கலந்து நமது அடையாளத்தை இழப்பது உறுதி. நமது இனம் வாழ வேண்டுமானால் நமது மொழி வாழ வேண்டும்; நமது மொழி வளர வேண்டும். நம் மொழிமீது நமக்குள்ள பற்று பெருக வேண்டும்.  நாம் நமது மொழியின் அடிப்படையில் ஒற்றுமை காணவேண்டும்; ஆகவே, நாம் தமிழால் இணைதல் வேண்டும்.

நாம் நமது மொழியால் இணைவது மட்டுமல்லாமல், நம் இனம் தொடர்ந்து நலமாகவும் வளமாகவும் தன்மானத்தோடும் வாழ்வதற்குத் தேவையான ஆக்க பூர்வமான பணிகளில் நாம் இடைவிடாது ஈடுபடவேண்டும். வள்ளுவர் கூறியதைப் போல் அழுக்காற்றை அகற்றி, நமது அவாவைக் (சுய நலத்தைக்) குறைத்து, வெகுளியை விலக்கி, இன்னாச்சொல் தவிர்த்து[3], ஏதிலார் குற்றம் போல் நம் குற்றம் கண்டு[4], தமிழர் அனைவரும் நம் உடன் பிறந்தார் எனக் கருதி, நமது இனத்தின் நலமே நம் குறிக்கோளாகக் கொண்டு தமிழன் என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்தல் வேண்டும். நமது மொழியோடு, நமது மொழியின் தனிச் சிறப்பான இலக்கியமாகிய திருக்குறளையும் நாம் கற்று, வள்ளுவர் காட்டும் நெறியில் வாழ வேண்டும். குறிப்பாக, தன்னலம் கருதாமல், தன்னம்பிக்கை குறையாமல் ஒற்றுமையுடன், சாதி, மதம், அரசியல் கட்சிகள், நாடு ஆகியவற்றால் வளரும் பிரிவு மனப்பான்மைகளை விலக்கி வாழ்ந்தால்தான் தமிழினம் தழைத்து வாழ முடியும்.

இன்றைக்குள்ள சூழ்நிலையில், தமிழ் மக்களிடத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் வரவேண்டுமானால், தன்னலமற்ற, நம்பிக்கைக்குப் பாத்திரமான, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்களுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட சான்றாண்மை மிக்க தலைவர்கள் வேண்டும்.  உதாரணமாக, மகாத்மா காந்தி, தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள், ‘தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநராக”[5] இருந்ததால்தான் அவர்களால் சமுதாயத்தில் மிகப் பெரிய புரட்சிகளைச் செய்து சமுதாயத்தைச் சீர்திருத்த முடிந்தது. அத்தகைய தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களுடைய வழிகாட்டுதலுக்கேற்ப நாம் செயல்பட்டால், தமிழ்ச் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற முடியும். அப்போதுதான்,   “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா”  என்ற நாமக்கல் கவிஞரின் கனவு நனவு ஆகும்.  ஆகவே, ”தமிழால் இணைந்து, செயலால் வெல்வோம்” என்பதை குறிக்கோளாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு தமிழனும் தன் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்



[1]    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
      செய்தொழில் வேற்றுமை யான்.                          (குறள் - 972)
[2]    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
     கொல்குறும்பும் இல்லது நாடு.                            (குறள் - 735)
[3]   அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம்.                                (குறள் – 35)
[4]   ஏதிலார் குற்றம்போல், தம் குற்றம் காண்கிற்பின்
     தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.                            (குறள் – 190)
[5]    புறநானூறு – பாடல் 182, 8-9

Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்