ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?


ஏன் இந்தப் பண்ணித் தமிழ்?

முனைவர் இர. பிரபாகரன்

பண்ணித் தமிழ்
தமிழ்நாட்டில் பலரும் தங்கள் பொருளாதார வசதிக்கும் அதிகமாகச் செலவு செய்து, தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ஐந்து வயதுக் குழந்தை வீட்டுக்கு வந்து, உயிரோடு இருக்கும் அம்மாவைமம்மிஎன்று அழைக்கிறது. அந்தத் தாய் அளவில்லாத  மகிழ்ச்சி அடைகிறாள். அறியாத வயதில் புரியாததைக் குழந்தை கூறுகிறது. அது போகட்டும். படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்? ”அந்தக் கதவைத் திறஎன்பதற்குப் பதிலாக அந்த டோரை ஓபன் பண்ணுஎன்றும், ”அந்தப் பெட்டியை மூடுஎன்பதற்குப் பதிலாகஅந்த பாக்ஸை குளோஸ் பண்ணுஎன்றும் , “என்னைத் தொலை பேசியில் கூப்பிடுஎன்று கூறுவதற்குப் பதிலாக  என்னை செல் போனில் கால் பண்ணுஎன்றும் பலரும் பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதில்பண்ணுஎன்ற வினைச்சொல் மட்டுமே தமிழ். இந்தக் கொடுந்தமிழுக்குப் பெயர்தான் பண்ணித் தமிழ்!  இது தமிங்கிலம்அல்லது தங்கிலீஷ்என்றும் அழைக்கபடுகிறது. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் மறைமலை அடிகளும் மொழிஞாயிறு தேவநேயப் பாவணரும் இன்று உயிரோடு இருந்தால் இந்தப் பண்ணித் தமிழைக் கேட்டுத் தற்கொலை பண்ணிக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இனக்கலப்பினால், ஒரு இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் ஏற்படும் தொடர்புகளால் ஒருமொழியில் உள்ள சொற்கள் மற்ற மொழியில் கலப்பது இயற்கை. எந்த மொழியிலும் மற்ற மொழிகளின் கலப்பு இல்லாமல் இருப்பதில்லை. தமிழ் மொழியும் அதற்கு விதிவிலக்கு அன்று. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறத் தொடங்கினர். காலப்போக்கில் வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. தமிழ்ச் சொற்கள் வடமொழியில் கலந்தன. சங்க இலக்கியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வடமொழிச் சொற்கள் காணப்படுகின்றன, சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறளில் ஏறத்தாழ நாற்பது வடமொழிச்சொற்கள் இருக்கலாம்.

மணிப்பிரவாளம்
எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதினால் மிக நன்றாக இருக்கும் என்ற எண்ணிய மேதாவிகள்மணிப்பிரவாளம்என்ற ஒரு உரைநடை வடிவத்தை உருவாக்கினார்கள். மணிப்பிரவாளம் என்றால் முத்தும் பவளமும் கலந்த மாலை என்று பொருள். அதை முத்தும் பவளமும்  பவளமும் சேர்ந்த மாலையாகக் கருதாமல் மலரும் முள்ளும் கலந்த மாலையாகக் கம்பர் போன்ற புலவர்களும், அவருக்குப் பின்வந்த பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் கருதினர் போலும். ஆகவேதான், அவர்கள் அந்த மணிப்பிரவாள நடையைப் பின்பற்றவில்லை. காலப்போக்கில், ஆரியர்களின் செல்வாக்கு அதிகரித்தது.  மன்னர்கள் ஆரியர்களையும் இந்து மதத்தையும் ஆதரித்தார்கள். அரசர்களின் ஆதரவாலும் இந்து மதத்தின் வளர்ச்சியாலும் வடமொழியின் ஆதிக்கம் வலிமை அடையத் தொடங்கியது. வடமொழிதேவ பாஷைஎன்றும் தமிழ்நீச பாஷைஎன்றும் கருதப்பட்டது.

          15 – ஆம் நூற்றாண்டில், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் வடமொழிக் கலப்பு உள்ளது. 18, 19 – ஆம் நூற்றாண்டு அளவில், வடமொழி கலந்து எழுதுவதும் பேசுவதும் பெருமைக்குறியதாகக் கருதப்பட்டது. 19 – ஆம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளாரின் உரைநடை மற்றும் சில பாடல்களில் வடமொழி கலப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக, முதலாம் திருமுறையில் உள்ள திருவடிப் புகழ்ச்சி என்ற பாடலில் உள்ள சில அடிகள்:
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்.
                                                   (முதற் திருமுறை, திருவடிப் புகழ்ச்சி)
 இந்தப் பாடல் முற்றிலும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தித் தமிழ் எழுத்துக்களால்  எழுதப்பட்டுள்ளது.

ராபர்ட் கால்டுவெல்
பத்தொன்பதாம் நூற்றாண்டில்  ராபெர்ட் கால்டுவெல் (1814 – 1891) என்ற ஆங்கிலேயர், தமிநாட்டிற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தார்.  அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வடமொழியையும் கற்றார். தமது ஆய்வின் அடிப்படையில்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற ஒருநூலை இயற்றினார். அந்த நூலில் அவர் கூறும் கீழ்வரும் கருத்துகள் தமிழின் பெருமையைத் தமிழர்களுக்கும் உலகுக்கும் எடுத்துரைக்கின்றன.
  • ·       தமிழ்மொழி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற திராவிட மொழிகளுக்கு மூலமொழி.
  • ·       தமிழ்மொழியின் இலக்கண அமைப்பும் வடமொழியின் இலக்கண அமைப்பும் முற்றிலும் மாறுபட்டவை. தமிழ் வடமொழியிலிருந்து தோன்றிய மொழி அன்று.
  • ·       தமிழ்மொழி, கிரேக்கம் இலத்தீன் போன்ற மொழிகளைப்போல் தொன்மையான, வளமான மொழி. அது தனித்தியங்கும் தன்மையுடைய மொழி.

தம்முடைய நூலால் தமிழின் பெருமையைத் தமிழர்களுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டிய பெருமை ராபர்ட் கால்டுவெல் அவர்களைச் சாரும் என்றால் அது மிகையாகாது.

தனித்தமிழ் இயக்கம்
ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்குப் பின்வந்த பரிதிமாற் கலைஞர் (1870 – 1903) என்ற தமிழ்ப் பெருமகனார், தமிழுக்குஉயர்தனிச் செம்மொழி  என்ற அடைமொழியை வழங்கினார். பின்னர், மறைமலை அடிகள் (1876 – 1950) தனித்தமிழ் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை 1916 – இல் உருவாக்கினார். ”தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்த மொழி. தமிழில் வடமொழி கலக்காமல் எழுத வேண்டும்; பேச வேண்டும்என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்ட இயக்கம்தான் தனித்தமிழ் இயக்கம். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், புலவரேறு பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ்க் காவலர்  கி. . பெ. விஸ்வநாதன் ஆகியோர் மறைமலை அடிகளோடு  ஒத்துழைத்து, தமிழர்களிடையை தமிழின் தனித்தன்மையைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை தோற்றுவித்தார்கள்.

தமிழின் தனித்தன்மையைப் பற்றிய விழிப்புணர்ச்சியைத் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கினாலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஊடகங்களிலும், திரைப்படங்களிலும், வடமொழிக் கலப்பு மிகுந்த தமிழ்மொழிதான் பயன்படுத்தப்பட்டது. திரைப்படங்களில் வடமொழிப் பாடல்களும், தெலுங்குப் பாடல்களும் பாடப்பட்டன. உதாரணமாக, 1944 – இல் வெளிவந்த ஹரிதாஸ்என்ற திரைப்படத்தில், எம்.கே. தியாகரஜ பாகவதர், பாபநாசம் சிவன் அவர்கள் எழுதியகிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரேஎன்று தொடங்கும் வடமொழிப் பாடலைப் பாடுவதைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் வரை மணிப்பிரவாள நடை பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது.

தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட இயக்கங்களும்
தந்தை பெரியாரின் முயற்சியால் 1944 –இல்  தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்தமிழன் யாருக்கும் தாழ்ந்தவன் அல்லன்; தமிழன் தன்மானத்தோடும், சுயமரியாதையோடு, பகுத்தறிவோடும் வாழ வேண்டும்என்று பறைசாற்றித் தமிழர்களுக்குத் தமிழினத்தைப் பற்றிய விழிப்புணச்சியைத் தட்டி எழுப்பியது. 1949 – ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் தமிழுக்கு ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணியது. அவர்களின் சிந்திக்கவைக்கும் செந்தமிழ்ச் சொற்பொழிவுகள், மறக்க முடியாத திரைப்பட வசனங்கள், தூய தமிழில் வெளிவந்த  நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவை மக்கள் மனதைக் கவர்ந்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட  தமிழ் மறுமலர்ச்சியால், மணிப்பிரவாளத்தின் வளர்ச்சி குறைந்தது.

இன்றைய நிலை
மணிப்பிரவாளத்தின் ஆதிக்கம் குறைந்தாலும், இன்றும் தமிழ் தனித்து இயங்கவில்லை. வடமொழிக் கலப்புக்குப் பதிலாக இப்பொழுது தமிழில் ஆங்கிலம் கலந்து எழுதுவதும் பேசுவதும் வழக்கிலிருக்கின்றன. உதாரணமாக, 2012 – ஆம் ஆண்டு வெளிவந்த “3” என்ற திரைப்படத்தில், வெளிவந்தகொலை வெறி டிஎன்ற பாடலில், “கொலை”, ”வெறிஆகிய இரண்டு சொற்கள் மட்டுமே தமிழ். மற்ற எல்லாச் சொற்களும் ஆங்கிலம். இணையதளத்தில், இந்தப்பாடல் தங்கிலீஷ்என்ற மொழியில் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் இப்பொழுது மாறியிருக்கிறோம். ஆனால், இன்னும் திருந்தவில்லை.  இப்பொழுது தோன்றியிருக்கும் பண்ணித் தமிழ் அல்லதுதங்கிலீஷ்ஆகியவை தமிழுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நிலை எப்படி வந்தது? சில அடிப்படைக் காரணங்கள்:
·       நெடுங்காலாமாகவே தமிழன் தன்னைத் தமிழனாகக் கருதவில்லை. தன்னைச் சேரனாகவும், சோழனாகவும், பாண்டியனாகவும் கருதினான். தமிழால் தமிழர்கள் ஒன்றுபடவில்லை. தமிழர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. ஆகவேதான், நம்மைக் களப்பிரர்களும், பல்லவரும், தெலுங்கர்களும், மராத்தியரும், துலுக்கர்களும், வெள்ளையர்களும் ஆண்டார்கள்.
·       இன்றும் நாம் சாதி, மதம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றால் நம்மைப் பிரித்துக் கொள்கிறோம். நம்மிடத்தில் இன்றும் ஒற்றுமை இல்லை.
·       பல நூற்றாண்டுகள் பிறரால் ஆளப்பட்டதால் நம்மிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. வடமொழிதான் ஆண்டவனை வழிபடுவதற்கு ஏற்ற மொழி; ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும்; அமெரிக்காவிற்குச் செல்லலாம் என்ற மனப்பான்மை தமிழர்களிடத்தில் தழைத்தோங்கி இருக்கிறது.

இந்த நிலை மாறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலைமை மாறினால்தான் தமிழ் வாழும்; தமிழ் வளரும். இந்த நிலையை எப்படி மாற்றுவது? தனிப்பட்ட முறையில்  நாம் சில செயல்களைச் செய்யலாம். தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தனி மனிதர்கள் செய்ய வேண்டிய  செயல்கள்:
·       தமிழ் மொழிதான் நம்முடைய அடையாளம் என்பதை உணர்வது. தமிழின்றித் தமிழன் இல்லை; தமிழன் இல்லாமல் தமிழும் இல்லை. ஆகவே, தமிழ்மொழியும் தமிழினமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பவை.
·       தமிழன் என்று ஒரு இனமுண்டு; தமிழர் அனைவரும் நம் கேளிர்என்பதை உணர்வது. இந்த உணர்வு இருந்திருந்தால், அண்மையில் ஈழத்தில் நடந்த அட்டூழியங்களைக் கண்டு, தமிழகம் கொதித்து எழுந்திருந்திருக்கும். அது நடைபெறவில்லை.
·       இயன்ற அளவு வீட்டில் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவது.
·       தமிழர்களோடு நல்ல தமிழில் பேசுவது.
·       குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தமிழின் பெருமையை, அவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் எடுத்துரைப்பது.
தமிழக அரசு செய்ய வேண்டிய செயல்கள்:
·       தமிழை முதல் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரைத் தமிழைக்  கட்டாய பாடமாக்க வேண்டும்.
·       தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணிபுரிய விரும்புபவர்களுக்குத்  தமிழில் ஒரு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
·       வழக்காடு மன்றங்களில் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும்.
·       ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும்.
·       அரசு சார்ந்த ஆவணங்களைத் தமிழில் வெளியிட வேண்டும்.
·       அறிவியல், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கான நூல்களைத் தமிழில் உருவாக்க வேண்டும்.
·       ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும், உருசியர்களும், ஃபிரான்ஸ் நாட்டுக்காரர்களும் மற்றும் பல நாடுகளில் உள்ளவர்களும் தங்கள் மொழிகளிலேயே கல்வி கற்கிறார்கள். அதுபோல், தமிழ்நாட்டில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
·       தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
·       தூய தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தும்  ஊடகங்களுக்கு  ஆதரவு அளிக்க வேண்டும்.
·       எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுபோன்ற பல செயல்களைச் செய்தால்தான், தமிழ்மொழி மீண்டும் தழைக்கும். தமிழைக் கொலை செய்யும் தங்கிலீஷ்காரர்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும், பண்ணித் தமிழ் பேசுவோரிடமிருந்தும் தமிழைக் காப்பாற்றுவது நமது தலையாய கடமை.

Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு

தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்