தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்
தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார் முனைவர் இர. பிரபாகரன் சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு , சோழநாட்டை இரண்டாகப் பிரித்து , மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு க் கிள்ளி வளவன் , நலங்கிள்ளி , மாவளத்தான் என்று மூன்று மகன்க ள் இருந்தனர். மணக்கிள்ளியின் மகள் நற்சோணை , சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள். சேரன் செங்குட்டுவனும் , சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த இருபிள்ளைகள். ஒரு சமயம் , வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விர...