தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்


தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத கோவூர் கிழார்
முனைவர் இர. பிரபாகரன்
 சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.  கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர்.  மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர்.  வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்குக் கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.  மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள்.  சேரன் செங்குட்டுவனும், சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும்  இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் பிறந்த இருபிள்ளைகள்.
          ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே போர் நடந்தது.  அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர்.  வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான்.  மணக்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நெடுங்கிள்ளி உரையூரைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டான்.
புலவர் கோவூர் கிழார், கிள்ளி வளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, சிறுகுடிக் கிழான் பண்ணன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவர் சோழன் நலங்கிள்ளியையும் கிள்ளி வளவனையும் புகழ்ந்து பாடியுள்ளார். நலங்கிள்ளியின் வெற்றிகளைச் சிறப்பித்து, புறநானூற்றுப் பாடல் 31 – இல், ” வட நாட்டில் உள்ள மன்னர்கள் நீ எப்பொழுது அங்கே உன் படையுடன் வருவாயோ என்று நினைத்து நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.என்று கோவூர் கிழார் அவனைப் புகழ்ந்து பாடுகிறார். அடுத்த பாடலில் அவர் சோழன் நலங்கிள்ளியின்  வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார். புறநானூற்றுப் பாடல் 41 -இல், கோவூர் கிழார், ”சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோபமூட்டியவர்கள், அவர்களின் நாடுகளில் நடைபெறும் தீய நிமித்தங்களையும், அவர்களின் கனவில் காணும் தீய நிகழ்ச்சிகளையும் நினைத்து அஞ்சுகின்றார்கள். அவர்கள் தம் அச்சத்தை தம் மகளிர்க்குத் தெரியாதவாறு மறைத்துக் கலங்குகின்றனர்.” என்று கிள்ளி வளவனின் வலிமையையும் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சி வாழ்ந்தையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு மன்னர்களைப் புகழ்ந்தும் பாராட்டியும் பாடிய புலவர் கோவூர் கிழார், அவர்கள் தவறு செய்த பொழுது அவர்களைத் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை.
நாட்டை விட்டுக்கொடு அல்லது போரிடு!
என்ன காரணத்தாலோ, நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே பகை மூண்டது.  ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளி, ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான்.  நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான்.  பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான்.  நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டாலும், நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான்.  அச்சமயம், கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று,

 அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
 மறவை ஆயின் போரொடு திறத்தல்
 அறவையும் மறவையும் அல்லை ஆகத்
 திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
 நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்            
 நாணுத்தக உடைத்திது காணுங் காலே!
(புறநானூறு, பாடல் 44, 11- 16)

என்று கூறுகிறார். அதாவது, ”நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; வீரனாக வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய்.  இந்த இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியதுஎன்று அறிவுரை கூறினார். ஒரு அரசனிடம் சென்று அவன் செயல் சரியன்று என்று கூறுவதும் அவன் செயல் வெட்கத்திற்குரியது என்று கூறுவதும் அவ்வளவு எளிதன்று.  கோவூர் கிழாரின் மன உறுதிக்கும், நெடுங்கிள்ளிக்கு அவரிடம் இருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

தோற்பது நும் குடியே!
சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே இருந்த பகை வளர்ந்துகொண்டே இருந்தது. சோழன் நலங்கிள்ளி, சோழன் நெடுங்கிள்ளியை எதிர்த்து மீண்டும் ஒருமுறை  போரிடுவது என்று முடிவு செய்தான். அதை அறிந்த புலவர் கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியிடம் சென்று, “ நீ நெடுங்கிள்ளியுடன் போர் செய்யப் போவதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் இருவரில் எவரும் வெண்ணிறமான பனம்பூமாலை அணிந்த சேரனும் இல்லை; கரிய வேம்பின் மாலையை  அணிந்த பாண்டியனும் இல்லை. நீங்கள் இருவருமே ஆத்திப் பூக்களாலான மாலையை அணிந்த சோழ மன்னர்கள். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அன்று. ஆகவே, உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. உங்களைப் போன்ற மற்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிரிப்பார்கள்.” என்று கூறிச் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். கோவூர் கிழாரின் முயற்சியால் சிலகாலம் போர் தவிர்க்கப்பட்டது. மன்னர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தயங்காமல்  சுட்டிக் காட்டும்  இயல்புடையவராக கோவூர் கிழார் வாழ்ந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் புறநானூற்றுப் பாடல்  (பாடல் 45) உறுதிப்படுத்துகிறது.

புலவரைக் காத்த புலவர்!
ஒரு சமயம் இளந்தத்தன் என்ற புலவர் உறையூருக்குச் சென்றார். அப்பொழுது அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவரை ஒரு ஒற்றன் என்று தவறாகக் கருதி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தான். அப்பொழுது அங்குச் சென்ற கோவூர் கிழார், ”வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள்போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகாக்காமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வார்களோ? புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் வெட்கப்படச்  செய்து, அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள். ” என்று புலவர்களின் பெருமையை எடுத்துரைத்து இளந்தத்தனைக் காப்பற்றினார் என்று புறநானூற்றுப் பாடல் 47-இல் இருந்து தெரிகிறது.

சிறுவர்களைக் காப்பாற்றிய கோவூர் கிழார்
ஒரு சமயம், கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பினார். அவர் கிள்ளி வளவனிடம் சென்று, “ நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த மாமன்னன் சிபியின் (சிபிச் சக்கரவர்த்தியின்) வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். பிறகு, நீ உன் விருப்பப்படி செய்.என்று கோவூர் கிழார் முறையிட்டு அந்தச் சிறுவர்களைக் காப்பாற்றினார்.

புலவர் கோவூர் கிழார் இயற்றிய  பாடல்களிலிருந்து, சோழன் நெடுங்கிள்ளி, சோழன் நலங்கிள்ள்ளி, சோழன் கிள்ளி வளவன் ஆகிய  சோழ மன்னர்களிடமும் அவருக்கு இருந்த செல்வாக்கும், தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காத அவருடைய மனவுறுதியும்  மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.  


Comments

Popular posts from this blog

முல்லைப்பாட்டு

காந்தர்வமணமும் களவொழுக்கமும்